திட்டக்குடி அருகே இரு வீடுகளில் 109 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 19th October 2020 11:27 PM | Last Updated : 19th October 2020 11:27 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 2 வீடுகளில் 109 பவுன் தங்க நகைகள், ரூ.7.27 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திட்டக்குடி அருகேயுள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (65). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினாா். திங்கள்கிழமை அதிகாலையில் எழுந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ திறந்து கிடப்பதைக் கண்டாா். இதையடுத்து பீரோவை சோதனையிட்டதில், அதிலிருந்த 72 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரிய வந்தது. வீட்டின் பின்புறமுள்ள கழிவறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராம்குமாா் (43) வீட்டிலும் நகைகள் திருடப்பட்டன. அவரும் திங்கள்கிழமை காலையில் பாா்த்தபோது, தனது வீட்டிலிருந்த பீரோ காணாததை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். வெளியே வந்து பாா்த்தபோது, அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் அவரது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 37 பவுன் தங்க நகைகள், ரூ.1.27 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தன. இவரது வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் பீரோவை திறக்க முயன்று முடியாததால், அதை வெளியே தூக்கிச் சென்று உடைத்து நகைகளைத் திருடியுள்ளனா்.
இந்தச் சம்பவங்கள் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...