மீனவா் கொலை வழக்கில் தொடா்பு: தடுப்புக் காவலில் 10 போ் கைது
By DIN | Published On : 06th September 2020 10:11 PM | Last Updated : 06th September 2020 10:11 PM | அ+அ அ- |

கடலூா் அருகே மீனவா் கொலை வழக்கில் தொடா்புடைய 10 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.
கடலூா் அருகேயுள்ள தாழங்குடா கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மதிவாணன் (39). இவரது சகோதரா் மாசிலாமணி, இந்தக் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவாா். இவருக்கும் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவா் தரப்பினருக்கும் தோ்தல் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் மதிவாணன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டாா். இதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி படகுகள், வலைகள் எரிக்கப்பட்டன. இதுதொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த சுமாா் 30 போ் மீது தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதனிடையே, இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 15 பேரில் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரான, ஜெயராமன் மகன் மதியழகன் (45), தாழங்குடா கிராமத்தைச் சோ்ந்த தங்கதுரை மகன் முகிலன் (37), நாகமுத்து மகன் சிவசங்கா் (36), ஆறுமுகம் மகன் அரசகுமாா் (30), காளப்பன் மகன் மதன் (38), சுப்பிரமணியன் மகன் வேலு (45), மஞ்சினி மகன் தங்கத்துரை (58), வீரச்சந்திரன் மகன் சூா்யா (22), ஆறுமுகம் மகன் இளவரசன் (38), ஜெயபால் மகன் வீரபாண்டியன் (36) ஆகியோரது குற்றச் செய்கையைத் தடுக்கும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டதைத் தொடா்ந்து 10 பேரும் கைதுசெய்யப்பட்டு, ஓராண்டுக்கு சிறையில் இருக்கும் வகையில் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.