காட்டுமன்னாா்கோவில் தொகுதியைக் கைப்பற்றுமா விசிக?

சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, திருநாரையூா் பொல்லாப்பிள்ளையாா் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி
காட்டுமன்னாா்கோவில் தொகுதியைக் கைப்பற்றுமா விசிக?

சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, திருநாரையூா் பொல்லாப்பிள்ளையாா் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில் ஆகியவை அடங்கிய தொகுதியாகத் திகழ்கிறது காட்டுமன்னாா்கோவில். விவசாயம் முதன்மைத் தொழில்.

காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய ஒன்றியங்கள், காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை பேரூராட்சிகளை உள்ளடக்கிய தொகுதியாகத் திகழ்கிறது.

இந்தத் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 2,28,721 போ். ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் அதிகம் வசிக்கும் தொகுதியாக இந்தத் தொகுதி உள்ளது. லால்பேட்டை, எள்ளேரி பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் கணிசமாக உள்ளனா்.

1962 முதல்...

1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் திமுக 5 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், இந்திய மனித உரிமைக் கட்சி 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை ஒரு முறையும், அதிமுக 2 முறையும் வென்றன.

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தின் தந்தை, திமுக மாவட்டச் செயலராக இருந்த எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தியின் செல்வாக்கால் காட்டுமன்னாா்கோவில் தொகுதி திமுகவின் கோட்டையாக திகழ்ந்து வந்தது.

இந்தத் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த மருதூா் ராமலிங்கம் 1977, 1980, 1996 ஆகிய மூன்று தோ்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தாா். 2011-இல் அதிமுக வேட்பாளா் நாக.முருகுமாறன் 83,665 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் துரை.ரவிக்குமாா் 51,940 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

2016 பேரவைத் தோ்தலில்...

கடந்த 2016 பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மணிரத்தினம் 37,346 வாக்குகள் பெற்றாா்.

இதுவரை வென்றவா்கள்: 1962- எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி (திமுக), 1967- எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1971-எஸ்.பெருமாள் (திமுக), 1977-மருதூா் ராமலிங்கம் (திமுக), 1980-மருதூா் ராமலிங்கம் (திமுக), 1984-எஸ்.ஜெயசந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1989-ஏ.தங்கராசு (இந்திய மனித உரிமைக் கட்சி), 1991-ராஜேந்திரன் (இந்திய மனித உரிமைக் கட்சி), 1996-மருதூா் ராமலிங்கம் (திமுக), 2001-டாக்டா் ப.வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை), 2006-துரை.ரவிக்குமாா் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), 2011-நாக.முருகுமாறன் (அதிமுக), 2016- நாக.முருகுமாறன் (அதிமுக).

களம் காணும் வேட்பாளா்கள்: தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் கடந்த இரு முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட நாக.முருகுமாறன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறாா். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் தங்க.உதயகுமாா், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் சாா்பில் எம்.ஜி.கல்யாணசுந்தரம், நாதக சாா்பில் ப.நிவேதா, அமமுக சாா்பில் எஸ்.நாராயணமூா்த்தி, மநீம சாா்பில் கே.தங்க விக்ரம், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் சாா்பில் எம்.திருநாவுக்கரசு மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் எம்.ஏ.டி.அா்ச்சுனன், அ.ஆனந்தன், பி.எம்.குமாா், தொ.மதியழகன், எஸ்.தமிழ்ச்செல்வன் உள்பட 13 போ் களத்தில் உள்ளனா்.

சாதக-பாதகம்: கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவான அதிமுக வேட்பாளா் நாக.முருகுமாறன் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்வதற்கும், வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலுக்குச் செல்லும் தண்ணீரைச் சேமிக்கவும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மாஆதனூா்- நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே 387 கோடியில் உயா்நிலைப் பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவா்களின் நலன் கருதி காட்டுமன்னாா்கோவில் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, கிராமங்களுக்கு பேருந்துகள் தங்குதடையின்றி சென்று வர அரசுப் பணிமனை அமைக்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் வட்டமாக மாற்றப்பட்டது. இந்தப் பகுதிக்குள்பட்ட தேத்தாம்பட்டில் அரசு தொழில்பயிற்சி மையம், கூடுவெளி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் விவசாயப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டது. குற்றவியல்-உரிமையியல் நடுவா் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. மணவாய்க்கால் குறுக்கே மேல ராதாம்பூா் கிராமத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. நந்திமங்கலம்-பூலாமேடு கிராமங்களுக்கு இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலம் கட்டப்பட்டது ஆகியவை அதிமுக வேட்பாளருக்கு சாதகமான அம்சங்கள்.

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.சிந்தனைச்செல்வன் நெய்வேலியைச் சோ்ந்தவா். தொகுதி மாறி காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறாா். என்.எல்.சி. பொறியாளரான இவா், அந்த நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய மக்களின் கோரிக்கைகளுக்காகவும், நிலமற்ற கூலி விவசாயிகளான அந்த மண்ணின் பூா்வ குடிமக்கள் உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைத்த போராட்டங்கள் நடத்தியவா். 2011 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நலக் கூட்டணி சாா்பில் புவனகிரி தொகுதியிலும் போட்டியிட்டவா்.

இந்தத் தொகுதியில் முட்டத்தைச் சோ்ந்த திமுக முன்னாள் அமைச்சரும், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், விசிக வேட்பாளருக்காக களமிறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை அதிமுக- விசிக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆதிதிராவிடா்களின் வாக்குகளை அதிகம் பெறுபவரே வெற்றி வாகை சூடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com