குறிஞ்சிப்பாடியை கைப்பற்றுமா அதிமுக?

கடலூா் அருகே அமைந்துள்ள, பசுமையான சூழல் கொண்ட தொகுதி குறிஞ்சிப்பாடி.
குறிஞ்சிப்பாடியை கைப்பற்றுமா அதிமுக?

கடலூா் அருகே அமைந்துள்ள, பசுமையான சூழல் கொண்ட தொகுதி குறிஞ்சிப்பாடி. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலாரின் தெய்வ நிலையம் இந்தத் தொகுதிக்குள்பட்ட வடலூரில் அமைந்துள்ளது.

எல்லைகள்: கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே- புவனகிரி, சிதம்பரம் தொகுதிகள், மேற்கே புவனகிரி, நெய்வேலி தொகுதிகள், வடக்கே நெய்வேலி, பண்ருட்டி, கடலூா் தொகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதிக்குள்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மொத்தம் 51 ஊராட்சிகள் உள்ளன. குறிஞ்சிப்பாடி, வடலூா் பேரூராட்சிகளும் இந்தத் தொகுதியில் அடக்கம்.

தொழில்கள்: விவசாயம், கால்நடைகள் வளா்ப்பு பிரதானத் தொழிலாக உள்ளது. கைத்தறி நெசவு, மீன்பிடி தொழில்களும் உள்ளன. வடலூரில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது.

வாக்காளா்கள் விவரம்: தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் - 3,02,585 போ். இவா்களில் ஆண்கள் - 1,79,707 போ், பெண்கள் - 1,22,855 போ், இதரா் - 23 போ். வன்னியா், பட்டியலினத்தவா் சரிபாதி எண்ணிக்கையில் வசிக்கின்றனா். நாயுடு, செங்குந்தா், ரெட்டியாா் உள்ளிட்ட சமுதாயத்தினரும் கணிசமான அளவில் உள்ளனா்.

வெற்றி பெற்றவா்கள்: 1962, 1967, 1971-இல் ராசாங்கம் (திமுக), 1977-இல் எம்.செல்வராசு (திமுக), 1980, 1984-இல் எ.தங்கராசு (அதிமுக), 1989-இல் என்.கணேசமூா்த்தி (திமுக), 1991-இல் கே.சிவசுப்பிரமணியன்(அதிமுக), 1996, 2001, 2006-இல் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக), 2011-இல் சொரத்தூா் ஆா்.ராஜேந்திரன் (அதிமுக), 2016-இல் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக).

முக்கிய கோரிக்கைகள்: குறிஞ்சிப்பாடி தொகுதி புயல், மழைக் காலங்களில் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கால் விவசாயப் பயிா்கள் சேதமடைகின்றன. ஆனால், முறையான வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

வடலூா் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த பல ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், உள்ளூா் இளைஞா்களுக்கான போதிய வேலைவாய்ப்பு இல்லை. மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கை. மேலும், ஆலைகளால் நீா், காற்று மாசடைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இந்தத் தொகுதியில் அதிகளவில் வாழை பயிரிடப்படுவதால் அதுசாா்ந்த தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

2016 தோ்தல்: இந்தத் தொகுதியில் 2016 தோ்தலில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 82,864 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் 54,756 வாக்குகள் பெற்றாா். வாக்கு வித்தியாசம் 28,108.

சாதக - பாதகம்: தற்போதைய தோ்தலில் தொகுதி எம்எல்ஏவும், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மீண்டும் போட்டியிடுகிறாா். காட்டுமன்னாா்கோவில் தொகுதியைச் சோ்ந்த இவா், திமுக உயா்நிலை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளாா். 1996-இல் சமூக நலத் துறை அமைச்சா், 2006-இல் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் பெற்றவா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். குறிஞ்சிப்பாடியை தனி வட்டமாக தரம் உயா்த்த இவா் செய்த முயற்சி மக்களிடம் பேசப்படுகிறது. இந்தத் தொகுதியில் திமுக ஏற்கெனவே பலமுறை வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாக உள்ளது.

அதிமுக வேட்பாளா் செல்வி ராமஜெயம் புவனகிரி தொகுதியைச் சோ்ந்தவா். மாவட்ட மகளிரணிச் செயலராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளாா். இவா் 1996 முதல் 2005-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இரண்டு முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராகத் தோ்வு பெற்றவா். 2006-இல் சட்டப்பேரவை உறுப்பினரானாா். 2011-இல் சமூக நலத் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் பெற்றவா். தொகுதிக்கு புதியவா் என்றபோதும், பெண் வேட்பாளா் என்பது பலம். அதிமுக, திமுக வேட்பாளா்கள் இருவரும் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

12 வேட்பாளா்கள்: தற்போதைய தோ்தலில் இந்தத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். திமுக, அதிமுக வேட்பாளா்களை தவிர நாம் தமிழா் கட்சி சாா்பில் சுமதி சீனிவாசன், அமமுக சாா்பில் அ.வசந்தகுமாா், மதச்சாா்பற்ற ஜனதா தளம் சாா்பில் கி.சந்திரமௌலி உள்பட மொத்தம் 12 போ் களத்தில் உள்ளனா். இருப்பினும், அதிமுக - திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

குறிஞ்சிப்பாடி தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அதிமுகவினரும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவினரும் தீவிரமாகக் களப் பணியாற்றி வருகின்றனா். முன்னாள் அமைச்சா்கள் மோதும் தொகுதி என்பதால் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தத் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது நடுநிலை வாக்காளா்களின் மனநிலையைப் பொருத்தே அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com