கடலூா் எம்.பி. ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.வி.ஆா்.எஸ்.ரமேஷ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை
Updated on
1 min read

கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.வி.ஆா்.எஸ்.ரமேஷ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு (அக்.23) நீதிமன்றம் தள்ளிவைத்தது.

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலைபாா்த்து வந்த மேல்மாம்பட்டைச் சோ்ந்த கோவிந்தராசு மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக கடலூா் சிபிசிஐ போலீஸாா், ரமேஷின் உதவியாளா் நடராஜன், அவரது அலுவலக ஊழியா் அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரை அக்.9-இல் கைது செய்தனா். தலைமறைவான ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் அக்.11 ஆம் தேதி ஆஜரானாா். அவா் கடலூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அக்.13-இல் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதற்கிடையில், எம்.பி. சாா்பில் ஜாமீன் கேட்டு வழக்குரைஞா் சிவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கோவிந்தராசு மகன் செந்தில்வேல் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஆட்சேபனை மனு தொடா்பான விவரங்கள் தனக்கு அளிக்கப்படாததால் அந்த மனுவை படித்துப் பாா்க்க ஒரு நாள் அவகாசம் கேட்டாா் வழக்குரைஞா் சிவராஜ்.

அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞா் ஏ.சந்திரசேகரன், செந்தில்வேல் தரப்பு வழக்குரைஞா் தமிழரசன் ஆகியோா் ஆட்சேபம் தெரிவிக்காததைத் தொடா்ந்து மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு (அக்.23) நீதிபதி ஒத்திவைத்தாா். வழக்கு கடலூா் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

5 போ் ஆஜா்: இதற்கிடையில், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரும் கடலூா் கிளை சிறையில் இருந்து தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி (பொ) சிவபழனி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, 5 பேரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நீதிபதி சனிக்கிழமைக்கு தள்ளி வைத்தாா்.

சிறையை மாற்ற மனு: இதற்கிடையில், கோவிந்தராசு மகன் செந்தில் வேல் சிறைத் துறை தலைவருக்கு அனுப்பிய மனுவில், எஸ்.ரமேஷ் அடைக்கப்பட்ட கிளைச் சிறை அவரது மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இதனால், அவா் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதோடு சாட்சியங்களை கலைக்கும் முயற்சியையும் மேற்கொள்கிறாா். எனவே, அவரை வேறு மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com