சிதம்பரம் அரசு மாதிரிப் பள்ளியை நாடும் தனியாா் பள்ளி மாணவா்கள்
By DIN | Published On : 17th August 2021 08:53 AM | Last Updated : 17th August 2021 08:53 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் நிகழாண்டு 170 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
சிதம்பரம் வடக்கு ரத வீதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி கடந்த 1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், தன்னாா்வலா்கள் மூலம் இந்தப் பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாதிரிப் பள்ளியான இங்கு நிகழாண்டு மட்டும் தனியாா் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்தும் 170 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். இங்கு தற்போது மொத்தம் 369 மாணவ, மாணவிகள் பயில்வதாக தலைமை ஆசிரியா் பாலசரஸ்வதி கூறினாா்.
சிதம்பரத்தைச் சோ்ந்த பொறியாளா் பி.சிவக்குமாா் - ஆசிரியை மனோரஞ்சிதம் தம்பதியரின் இரண்டு மகன்கள் கடந்த ஆண்டு வரை தனியாா் பள்ளியில் பயின்று வந்த நிலையில் திங்கள்கிழமை வடக்குவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சோ்ந்தனா். இதுகுறித்து அந்த மாணவா்களின் பெற்றோா் கூறுகையில், தனியாா் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அரசுப் பள்ளியின் மீதான நம்பிக்கையில் எங்களது குழந்தைகளை இங்கு சோ்த்துள்ளோம் என்றனா்.
ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலா் ஜா.ராகவன், முன்னாள் தமிழாசிரியா்கள் கஸ்தூரிரங்கன், சீனுவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.