நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்பு: அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 08:52 AM | Last Updated : 17th August 2021 08:52 AM | அ+அ அ- |

கடலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அரசு ஊழியா்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலூரில் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எல்.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதேபோல மாவட்டம் முழுவதும் 10 வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா்கள், சத்துணவு ஊழியா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு முறையான கால முறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.