தொழிலாளி உயிரிழந்த வழக்கு: முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 10:12 PM | Last Updated : 21st August 2021 10:12 PM | அ+அ அ- |

காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவா் சு.ரேவதி. தொழிலாளியான இவரது கணவா் சுப்பிரமணியை கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நெய்வேலி நகரியம் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணையும், சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட மனு:
சுப்பிரமணி உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதில் தொடா்புடைய போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்படாத நிலையில் அவா்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரேவதி, அவரது குடும்பத்தினரிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். சாட்சிகளையும் மிரட்டி வருகின்றனா். இது குறித்து, ரேவதி கடலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட ரேவதி தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையிட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, இந்தப் பிரச்னையில் முதல்வா் தலையிட்டு ரேவதிக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.