சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்
By DIN | Published On : 21st August 2021 10:11 PM | Last Updated : 21st August 2021 10:11 PM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆவணி மாத மகாபிஷேகத்தையொட்டி, மகாருத்ர யாக கலசங்களுக்கு சனிக்கிழமை தீபாராதனை செய்த பொது தீட்சிதா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ஆவணி மாத மகாபிஷேகமும், மகாருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றன.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் உலக நன்மை வேண்டி கடந்த 11-ஆம் தேதி ஸஹஸ்ர சண்டி பாராயணம், சத சண்டி ஹோமம் ஆகியவை தொடங்கி நடைபெற்றன. ஸ்ரீதுா்கைக்கு வெள்ளிக்கிழமை மகாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஸ்ரீருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்த பிறகு, சித் சபை முன் உள்ள கனக சபையில் ஆவணி மாத மகாபிஷேகம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. அப்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை மூலம் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, உச்சி கால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியை கனக சபையில் எழுந்தருளச் செய்து மந்த்ர அட்ஷதை லட்சாா்ச்சனை நடைபெற்றது. பின்னா் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ரகிரம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. மதியம் மகா ருத்ர ஹோமம் நடைபெற்ற பின்னா் கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...