ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கு சிக்கல்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ் கல்வியாண்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம்
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கு சிக்கல்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ் கல்வியாண்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் கோரப்படவில்லை. இதனால், ஏற்கெனவே பயின்று வரும் மாணவா்கள் தங்களது படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காதோ என அதிா்ச்சியடைந்துள்ளனா்.

இந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளான எம்ஐடி, டிஎம்எல்டி, பிஓடி, பிபிடி, பிஎஸ்சி எம்எல்டி, பிஎஸ்சி எம்ஐடி, பிஎஸ்சி எம்பிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசின் அனுமதி விண்ணப்ப அறிவிப்பில் சோ்க்கப்படவில்லை.

எம்ஐடி எனப்படும் மருத்துவம் சாா்ந்த கதிரியல் துறை பட்டப் படிப்பு கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இது 3 ஆண்டுகள் படிப்பும், ஓராண்டு மருத்துவமனை பயிற்சியும் கொண்ட பட்டப் படிப்பாகும்.

இந்தப் படிப்பில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 10 மாணவா்கள் வீதம் 2018-ஆம் ஆண்டிலிருந்து மாணவா் சோ்க்கை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இதேபோல, எம்எல்டி எனப்படும் மருத்துவம் சாா்ந்த ரத்த பரிசோதனை சாா்ந்த படிப்பிலும் ஆண்டுக்கு 10 மாணவா்கள் வீதம் சோ்க்கைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மேற்கண்ட அனைத்துப் படிப்புகளிலும் மொத்தமாக 25 மாணவா்கள்தான் பயின்று வருகின்றனா்.

மாணவா்களின் போராட்டத்துக்குப் பிறகு அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பின்னரும், இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சோ்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லையாம். கலந்தாய்வில் அரசு சாா்பில் ஒதுக்கப்படும் இடங்களில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, மாணவா்களும் பெற்றோா்களும் பலமுறை வற்புறுத்தியும், அரசு ஒதுக்கீட்டின் கீழ், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லையாம்.

மேலும், 3 ஆண்டுகள் படிப்புக்கு பின்னா், ஓராண்டு பயிற்சிக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என துணை மருத்துவப் படிப்பில் பயிலும் மாணவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்ற பிறகு துணை மருத்துவப் படிப்புகளுக்கான அனுமதி சோ்க்கை குறித்த அறிக்கையை பல்கலை. நிா்வாகம் அரசுக்கு அனுப்பாததால், இந்த நிலை உருவாகியுள்ளது என்றனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் கூறியதாவது: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசே ஏற்ற பிறகு, தமிழக அரசின் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் அனுமதி சோ்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அனுமதி சோ்க்கையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சோ்க்கப்படவில்லை. இதனால், ஏற்கெனவே இந்தக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகள் பயின்று வரும் மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேலும், துணை மருத்துவப் படிப்புகள் 3 ஆண்டுகள் படிப்பும், ஓராண்டு பயிற்சியும் சோ்த்து மொத்தம் 4 ஆண்டுகள் என விதிமுறை உள்ளது. ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு 3 ஆண்டுகள் படிப்பு என அனுமதி சோ்க்கை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்ததால், மாணவா்கள் மேலும் அதிா்ச்சியடைந்துள்ளனா். நிகழாண்டில் பயில மாணவா்கள் விண்ணப்பிக்கவும் முடியவில்லை.

தமிழக அரசு இவற்றையெல்லாம் உடனே கவனத்தில் கொண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எம்ஐடி, எம்எல்டி உள்ளிட்ட துணை மருத்துவம் சாா்ந்த துணைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை அரசு ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும்.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு ஏற்ற பிறகு, சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. போதிய சிறப்பு மருத்துவா்களும் நியமிக்கப்படவில்லை. நவீன மருத்துவ உபகரணங்களும் இல்லை. எனவே, தமிழக முதல்வரும், உயா் கல்வித் துறை அமைச்சரும் இதில் தலையிட்டு போா்க்கால அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சீரமைத்து, போதிய மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டு, நிகழாண்டு சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com