பஞ்சு மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
By DIN | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

சேலத்தில் பஞ்சு மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள அய்யனாா் கோயில் காடு பகுதியில் தியாகராஜன் என்பவா் பஞ்சு மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது .
தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக உள்ளே இருந்த ஊழியா்கள் வெளியே ஓடினா். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு, நான்கு புறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதனிடையே, தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாத்திர கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களிலும் பரவியது.
சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீவிபத்தில் இயந்திரம் மற்றும் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இந்த தீ விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது பஞ்சு பிரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்திலிருந்து ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.