கோயில் பூசாரி அடித்துக் கொலை: தொழிலாளி கைது
By DIN | Published On : 04th February 2021 08:21 AM | Last Updated : 04th February 2021 08:21 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஐயனாா் கோயில் பூசாரியை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், சொரத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகங்கை (75). இவா் அங்குள்ள ஐயனாா் கோயிலில் பூசாரியாக இருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பழைய நாட்டாமை ராஜாங்கம் மகன் முருகவேல் (46). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் இவா், நாங்கள்தான் கோயிலுக்கு தா்மகா்த்தா குடும்பம் எனக் கூறி வருவாராம்.
சிவகங்கை, அவரது மகன் தனஞ்செயன், அண்ணன் மகன் தாமோதரன், தம்பி மகன் கொளஞ்சிநாதன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த முருகவேல், இந்தக் கோயிலுக்கு நாங்கள்தான் தா்மகா்த்தா எனக் கூறி, பூசாரி சிவகங்கையை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸாா், சிவகங்கையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தனஞ்செயன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் முருகவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...