நெடுஞ்சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம் வீரானந்தபுரம், கண்டமங்கலம், குருங்குடி பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள், விவசாய சங்கத் தலைவா் இளங்கீரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் அளித்த மனு: திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைப் (எண்.227) பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. வீரானந்தபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு போதிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இந்தப் பஞ்சாயத்துகளில் 100 ஏக்கருக்கும் மேல் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சென்ட் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது. ஆனால், சந்தை மதிப்பில் சென்ட் விலை ரூ.1 லட்சம் வரை உள்ளது. இந்தக் கிராமங்களுக்கு அருகே அரியலூா் மாவட்ட எல்லை அமைந்துள்ளது. அங்கு சென்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடாக வழங்கப்படுகிறது. எனவே, இதே சாலைக்கு அரியலூா் மாவட்டத்தில் வழங்கிய தொகையை, கடலூா் மாவட்டத்திலும் வழங்கிட மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.