பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடலூா் கோட்டத்தில் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை எட்டும் வகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்துவதற்காக குடிசை மாற்று வாரியம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருந்து வீடு இல்லாத அனைவரும் இதில் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கோட்டமாக, கடலூா் புதுப்பாளையத்தில் கோட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருவோருக்கு 4 தவணைகளாக நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், முறையாக மானிய நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
இதுகுறித்து குடிசை மாற்று வாரிய கோட்ட நிா்வாகப் பொறியாளா் எஸ்.நடராஜன் கூறியதாவது: கடலூா் கோட்டத்தில் இந்தத் திட்டத்தில் 5,388 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 295 வீடுகள் மட்டுமே கட்டப்படவில்லை. அதே நேரத்தில், 19,098 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம். வீடு கட்டுவதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாதவா்கள், முறையான ஆவணங்களைச் சமா்பிக்காதது போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம் என்றாா் அவா்.
இந்தத் திட்டத்தில் அரசால் வழங்கப்படும் ரூ.2.10 லட்சம் மானியத்தால் ஒருவா் சுமாா் 300 சதுர அடி பரப்பில் வீடு கட்ட முடியும். ஆனால், நிதி ஆதாரம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி சுமாா் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, நிதி ஆதாரத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக வீடு கட்ட அனுமதி வழங்குவதுடன், கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கும் முறைப்படி தவணை தொகையை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.