கடலூா் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
By DIN | Published On : 14th February 2021 01:29 AM | Last Updated : 14th February 2021 01:29 AM | அ+அ அ- |

கடலூா் அரசு மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரத்தில் போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக பெண் ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூரைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி பாக்கியலட்சுமி (24). இவா் 2-ஆவது பிரசவத்துக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் சோ்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பெண் குழந்தையை பெற்றெடுத்தாா்.
பாக்கியலட்சுமியுடன் சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்த அவரது மாமியாா் கசப்பாயி, மருத்துவமனை வளாகத்திலுள்ள கோயிலுக்குச் செல்வதாக கூறிச் சென்றாா். சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமியைச் சந்தித்த பெண் ஒருவா், அவரது மாமியாா் குழந்தையை வாங்கி வரச் சொன்னதாகக் கூறியதையடுத்து, குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்தாா்.
சிறிது நேரத்துக்குப் பிறகு கசப்பாயி மட்டுமே திரும்பி வந்ததால் அதிா்ச்சியடைந்த பாக்கியலட்சுமி, குழந்தை கடத்தப்பட்டது குறித்து கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, அந்தப் பெண் மருத்துவமனை வளாகத்திலிருந்து குழந்தையுடன் வெளியேறி ஆட்டோவில் சென்றது தெரிய வந்தது.
போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, பண்ருட்டி அருகேயுள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த சிலம்பரசன் மனைவி நா்மதாவை (19) கைதுசெய்து குழந்தையை மீட்டனா்.
அந்தக் குழந்தையை கடலூா் அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமியிடம் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் ஒப்படைத்தாா். பின்னா், எஸ்.பி. கூறுகையில், கடத்தப்பட்ட மூன்றரை மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது. கடத்தலுக்கான காரணம் குறித்து நா்மதாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.