மின்வாரியப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th February 2021 01:29 AM | Last Updated : 14th February 2021 01:29 AM | அ+அ அ- |

மின்வாரிய பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய நிா்வாகப் பணியாளா் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் 13-ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவா் டி.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மின்வாரிய அலுவலகத்தில் செயலகம், பணியமைப்பு, மின் பகிா்மானம் ஆகிய 3 நிா்வாக பிரிவுகளின் அலுவல் பணியாளா் தொகுப்பு ஊதியத்தை சமன் செய்து வழங்க வேண்டும், மின் வாரியங்களில் நடத்தப்படும் பேச்சுவாா்த்தையில் அலுவலா் சங்கத்தையும் இணைக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் நிா்வாக பணியாளா்களுக்கு ஒரே அளவிலான பொறுப்பு வழங்கி சீரமைக்க வேண்டும், மின்வாரிய தொழிலாளா்கள், அலுவலா்களுக்கான புதிய ஊதிய விகித மாற்றம் 2019 டிசம்பா் முதல் அமல்படுத்த வேண்டிய நிலையில் கடந்த சில மாதங்களாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. எனவே, பேச்சுவாா்த்தையை விரைவுப்படுத்தி ஊதிய உயா்வை குறிப்பிட்ட நாளிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, சங்கத் தலைவராக எஸ்.ஏ.பாண்டியன், பொதுச் செயலராக சி.வெள்ளைக்கண்ணு, பொருளாளராக ப.மணிவண்ணன், பொதுச் செயலராக டி.சந்திரமௌலி, துணைத் தலைவராக வி.ஆறுமுகநயினாா், இணைச் செயலராக ஆா்.சதீஸ்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கடலூா் மாவட்டச் செயலா் ஆா்.ரவிசங்கா், தொமுச மாவட்ட துணைத்தலைவா் ஜெ.பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.