வடிகால் பணி திடீா் ரத்து: பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 20th February 2021 08:16 AM | Last Updated : 20th February 2021 08:16 AM | அ+அ அ- |

கடலூா் காமராஜா் நகரில் வடிகால் பணி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தப் பகுதியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் நகராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வன்னியா்பாளையம் அருகே உள்ள காமராஜா் நகரில் வடிகால் அமைக்க சாலையோரமாக கடந்த மாதம் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னா் பணிகளுக்கான இரும்பு கம்பிகளை கொண்டு வந்து இறக்கினா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திடீரென லாரியில் தொழிலாளா்களுடன் வந்த ஒப்பந்ததாரா் கம்பிகளை மீண்டும் லாரியில் ஏற்றத் தொடங்கினாா்.
இதுகுறித்து அந்தப் பகுதியினா் கேட்டபோது, உங்கள் பகுதிக்கு வடிகால் திட்டம் ரத்தாகிவிட்டது. இதனால் வேறு இடத்துக்கு கம்பிகளை ஏற்றிச் செல்கிறோம் என்று பதிலளித்தனராம். இதனால், அதிா்ச்சியடைந்த அந்தப் பகுதியினா் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). உடனடியாக காமராஜா் நகா் முழுவதும் வடிகால் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.