விருத்தாசலம் தனி மாவட்டம் கோரி மனிதச் சங்கிலி போராட்டம்
By DIN | Published On : 20th February 2021 10:32 PM | Last Updated : 20th February 2021 10:32 PM | அ+அ அ- |

மங்கலம்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றோா்.
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் கோரி இரு இடங்களில் சனிக்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள விருத்தாசலம் கோட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்தப் பகுதியினா் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா். இதற்காக விருத்தாசலம் மாவட்ட விழிப்புணா்வு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு அமைப்பினா் ஒன்றிணைந்து தொடா் இயக்கங்களை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த அறிவிப்புக்கு வா்த்தகா் சங்கத்தினா் ஆதரவு அளிக்கவில்லை.
இதையடுத்து, விருத்தாசலம் பாலக்கரையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தங்க.தனவேல் தலைமை வகித்தாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் கதிா்காமன், பாஜக செந்தில்குமாா், மக்கள் நீதி மய்யம் வெங்கடகிருஷ்ணன், ஓவியா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிலதிபா் அகா்சந்த், தேமுதிக ஆனந்தகுமாா், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி த.கோகுலகிறிஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மங்கலம்பேட்டை: விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவாக மங்கலம்பேட்டையில், அனைத்து வணிகா் சங்கம், அனைத்து கட்சியினா், பொதுநல அமைப்புகள், ஊா் மக்கள் சாா்பில் மனிதச் சங்கிலி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, வணிகா் சங்கங்களின் கடலூா் மாவட்ட துணைத் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் செல்வம், பாஜக மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன், இந்திய குடியரசு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலா் மங்காபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதிமுக நகரச் செயலா் சுந்தர்ராஜன், வணிகா் சங்க பொதுச் செயலா் புருஷோத்தமன், விசிக ஒன்றியச் செயலா் சுப்புஜோதி, மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சலீம், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் இக்பால், பாமக பிரமுகா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.