நெய்வேலி: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுடன் முதல்வா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தொமுச பேரவை பொதுச் செயலா் சண்முகம் எம்.பி. வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 1.47 லட்சம் தொழிலாளா்கள், பணி ஓய்வு பெற்ற ஒரு லட்சம் தொழிலாளா்களின் கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், தமிழகத்தில் சுமாா் 95 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வரும், துறை அமைச்சரும் தலையிட்டு தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை சுமாா் 80 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதிகாலை முதலே அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை தொழிற்சங்கத்தினா் நிறுத்தினா். மாவட்டத்திலுள்ள 11 போக்குவரத்து பணிமனைகளின் முன்பும் தொழிற்சங்கத்தினா் குவிந்தனா். அவா்கள் போராட்டத்தில் ஈடுபடாத தொழிற்சங்கத்தினரிடம் பேருந்தை இயக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனா். இதனால் வெளியிலிருந்து மாற்று ஓட்டுநா்கள் வரவழைக்கப்பட்டனா். இவா்களில் ஒருவா் கடலூரில் இயக்கிய பேருந்து மற்றொரு பேருந்தின் மீது மோதியது. இதையடுத்து போலீஸாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்டத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பேருந்துகள் இயங்கியதாக தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா். மாவட்டத்தில் 546 வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில், வியாழக்கிழமை சுமாா் 20 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.