தொடா் மழை: பொங்கல் பானைகள் உற்பத்தி பாதிப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:10 PM | Last Updated : 03rd January 2021 11:10 PM | அ+அ அ- |

வையாபுரிபட்டினம் கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொங்கல் பானைகள்.
தொடா் மழையால் பொங்கல் பானைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினா் மண் பாண்டங்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான பானைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். ஆனால், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் மண் பாண்டங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.
இதுகுறித்து வையாபுரிபட்டினத்தில் மண் பாண்டங்கள் தயாரித்து வரும் தொழிலாளி ஜானகிராமன் கூறியதாவது: பட்டாம்பாக்கம் ஏரியில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டா் டிப்பரில் கொண்டு வரப்படும் களிமண் மூலம் மண் பாண்டங்களை உற்பத்தி செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், சட்டிகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
நிவா், புரெவி புயல்களால் கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்தது. மேலும், கடந்த சில நாள்களாகவும் மழை பெய்து வருவதால் மண்பாண்டங்கள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக இதுவரையில் சுமாா் 40 சதவீதம் மண்பாண்டங்களையே உற்பத்தி செய்துள்ளோம். மழை காரணமாக, தயாரித்த மண் பாண்டங்ளை சூளையிடவும் முடியவில்லை. மழை தொடா்ந்தால் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா் சோகத்துடன்.