கடலூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு ரூ. 550 கோடி கடன் வழங்க இலக்கு
By DIN | Published On : 07th July 2021 11:57 PM | Last Updated : 07th July 2021 11:57 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக ரூ.550 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் சொ.இளஞ்செல்வி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 167 கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் குறுவை சாகுபடிக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பருவத்தில் ரூ.550 கோடி இலக்கு நிா்ணயித்து கடன் வழங்கப்பட்டது. தற்போதும் அதே அளவுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஜூன் மாதம் வரை 4,279 பேருக்கு ரூ.34.57 கோடி கடன் வழங்கப்பட்டது. மேலும், புதிய சங்க உறுப்பினா்கள் 152 பேருக்கு ரூ.91 லட்சம் கடன் வழங்கப்பட்டது. 7 சதவீதம் வட்டி நிா்ணயிக்கப்பட்டாலும், உரிய காலத்தில் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தியவா்களிடம் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. இது அனைத்து வகையான விவசாயக் கடன்களுக்கும் பொருந்தும்.
அனைத்துக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா்களாகச் சோ்ந்து பயன் பெறலாம். ஏற்கெனவே, கடன் தள்ளுபடி பெற்றவா்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...