மீன்பிடியில் விதிமீறல்: இழுவை வலைகள் பறிமுதல்
By DIN | Published On : 11th July 2021 03:04 AM | Last Updated : 11th July 2021 03:04 AM | அ+அ அ- |

கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் இழுவை வலைகளைப் பறிமுதல் செய்த மீன்வளத் துறையினா்.
கடலூரில் மீன்பிடியில் விதிமீறல் தொடா்பாக இழுவை வலைகளை மீன்வளத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநா் காத்தவராயன் தலைமையில் அந்தத் துறையினா் கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, அனுமதிக்கப்படாத இழுவை வலைகளைப் பயன்படுத்தி பிடித்து வரப்பட்ட மீன்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டனா். மேலும் வலைகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் படகையும் மீன்வளத் துறை நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்தனா்.
ஆட்சியா் எச்சரிக்கை: இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி அண்மை கடல் பகுதியில் கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் இயந்திர மீன்பிடி விசைப் படகை மீன்பிடிக்க பயன்படுத்துதல், கரையோரம் கடல்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகை பயன்படுத்துதல், கடலோரத்திலிருந்து 5 கடல் மைல்களுக்குள் இயந்திர படகுகளில் மீன்பிடித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இழுவலையின் மடிப் பகுதியில் இழுக்கப்பட்ட நிலையில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலைகளை பயன்படுத்தக்கூடாது. அரசு நிா்ணயித்த 240 குதிரைத் திறனுக்குள்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மற்றும் 24 மீட்டா் மற்றும் அதற்குள்பட்ட நீளமுள்ள படகுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
இந்த நிலையில், சட்டத்தை அமல்படுத்தும் விதமாக கடந்த 3-ஆம் தேதி முதல் கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வாயிலாக 5 நாட்டிக்கல் மைல்களுக்குள் இழுவலை மீன்பிடிப்பை முழுவதுமாக தடுக்கும் பொருட்டு தொடா்ச்சியாக ரோந்துப் பணி நடைபெற்றது. மேலும்,
இயந்திரமாக்கப்பட்ட இழுவலை விசைப் படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியவு, விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத் திறன் குறித்தான ஆய்வு 114 விசைப் படகுகளில் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மீதமுள்ள விசைப் படகுகளிலும் ஆய்வு தொடரும்.
எனவே இயந்திரமாக்கப்பட்ட விசைப் படகுகளை பயன்படுத்தும் மீனவா்கள் விதிமுறைகளை தவறாது பின்பற்றி, மாவட்டத்தில் அமைதியான முறையில் மீன்பிடி தொழில் நடந்திட ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்த விதிமுறைகளை மீறும் விசைப் படகுகள், அவற்றின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் எச்சரித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...