தேசிய மக்கள் நீதிமன்றம்:1,203 வழக்குகளுக்கு தீா்வு
By DIN | Published On : 11th July 2021 03:01 AM | Last Updated : 11th July 2021 03:01 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,203 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் கடலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவஹா் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட நீதிபதி புவனேஸ்வரி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதிகள் செம்மல், சுபா அன்புமணி, எழிலரசி, உத்தமராஜ், பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பஷீா் வரவேற்றாா்.
மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில் நீதிமன்றங்களிலும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3,590 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டதில், 1,203 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. தீா்வுத் தொகையாக பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.4.21 கோடி வழங்கிட உத்தரவிடப்பட்டதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...