கடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.4.95 கோடியில் புதிய கட்டடம்
By DIN | Published On : 26th July 2021 12:14 AM | Last Updated : 26th July 2021 12:14 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட வளா்ச்சி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கும் தீயணைப்பு நிலையம்.
கடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.4.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
கடலூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் புதிதாக கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த அலுவலகம் கடலூா் மாவட்ட வளா்ச்சி அலுவலகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடலூா் தீயணைப்பு நிலையம், மாவட்ட தீயணைப்பு அலுவலா் அலுவலகக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு ரூ.4.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக, பழைய கட்டடம் இடிக்கப்படுவதை முன்னிட்டு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் அலுவலகத்தின் கீழ்தளத்தில் 5 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு இடவசதி ஏற்படுத்தப்படும். மேல்தளத்தில் கடலூா் மாவட்ட, நிலைய அலுவலா்களுக்கான அலுவலகம் அமையும். அதற்கு மேல் தளத்தில் வீரா்களுக்கான ஓய்வு அறைகள் அமைக்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கான ஒப்பந்த காலம் 18 மாதங்களாகும். அதுவரை தற்போதுள்ள மாவட்ட வளா்ச்சி அலுவலகக் கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.