சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் அவதி
By DIN | Published On : 26th July 2021 12:18 AM | Last Updated : 26th July 2021 12:18 AM | அ+அ அ- |

சாலை விரிவாக்கப் பணிக்காக பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் தோட்டப்பட்டுள்ள பள்ளம்.
பண்ருட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அந்தப் பணி முடிக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
தமிழ்நாடு நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பண்ருட்டி நகராட்சியில் இணைப்புச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. இதற்காக இணைப்புச் சாலையில் குறிப்பிட்ட தொலைவுக்கு ‘பேவா் பிளாக்’ கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இணைப்புச் சாலை சந்திக்கும் இடத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம், பண்ருட்டி ஒன்றிய ஆசிரியா்கள் கூட்டுறவு மற்றும் கடன் சங்கம் ஆகியவை இயங்கி வருகின்றன. பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் என மொத்தம் 102 பள்ளிகளில்
400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெண்களும், மாற்றுத் திறனாளி ஆசிரியா்களும் அடங்குவா். இவா்கள் புள்ளி விவரம், சம்பள பட்டியல், மாதாந்திர அறிக்கை சமா்ப்பித்தல், குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து செல்வா்.
வட்டாரக் கல்வி அலுவலகம் முன் சாலை விரிவாக்கப் பணிக்காக சுமாா் ஒன்றரை அடி ஆழம், 8 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு வரும் ஆசிரியா்கள் பள்ளத்தில் இறங்கிச் செல்ல முடியாத நிலையில், அருகேயுள்ள மின்மாற்றியின் ஓரமாக ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனா். மேலும், ஆசிரியா்கள், ஊழியா்களின் வாகனங்கள் வேறு வழியின்றி சாலையில் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து நகராட்சி பொறியாளா் ஆா்.சிவசங்கரன் கூறுகையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் சாலை விரிவைக்கப் பணிகள் முடிக்கப்படும் என்றாா்.