குடிநீா் ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்
By DIN | Published On : 24th June 2021 08:27 AM | Last Updated : 24th June 2021 08:27 AM | அ+அ அ- |

ராமநத்தம் - திட்டக்குடி சாலையில் இடைச்செருவாயில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திட்டக்குடி அருகே தனியாா் குடிநீா் ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள இடைச்செருவாய் கிராமத்தில் புதிதாக தனியாா் நிறுவனம் ஒன்று குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க முயற்சித்து வந்தது. கடந்த ஓராண்டாக இந்த ஆலை அமைப்பதற்கு அந்தப் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
குடியிருப்புக்கு அருகே சுத்திகரிப்பு ஆலை அமைந்தால், நிலத்தடி நீா் அதிகமாக உறிஞ்சப்படும். இதனால், இந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் குறைவதுடன், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே இந்தப் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீருக்காக நீண்ட தொலைவு நடந்து சென்று தண்ணீா் கொண்டு வரும் நிலை உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி, புதன்கிழமை அந்தத் தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டதாம்.
இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் ராமநத்தம் -திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.