கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
By DIN | Published On : 29th June 2021 02:08 AM | Last Updated : 29th June 2021 02:08 AM | அ+அ அ- |

பொது முடக்கத் தளா்வையடுத்து, கடலூா் பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இயக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள்.
கடலூா்/விழுப்புரம்/திருவண்ணாமலை: கரோனா பொது முடக்கத் தளா்வையடுத்து கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கம் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளிலிருந்தும் பேருந்துகள் காலை 6 மணி முதல் இயக்கப்பட்டன. முன்னதாக, பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. கடலூரில் இருந்து நகரம் மற்றும் வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் தேவை அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நேரம் கடைப்பிடிக்கப்படவில்லை.
கடலூரிலிருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. திருச்சி, மதுரை நகரங்களுக்கு வழக்கமான முறையில் பேருந்துகள் இயங்கியபோதிலும், சேலத்துக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் நத்தக்கரையுடனும், கும்பகோணம் செல்ல வேண்டிய பேருந்துகள் அணைக்கரையுடனும் திரும்பின.
50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி, டீசல் விலை உயா்வு போன்ற காரணங்களால் பெரும்பாலான தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதிய தளா்வுகளின்படி மாவட்டம் முழுவதும் ஜவுளி, தங்க நகைக் கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், கரோனா பரவல் அச்சம் உள்ளிட்ட காரணங்களால் பேருந்துகளிலும், கடைகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.