ரூ.50 லட்சம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டவா் கைது
By DIN | Published On : 29th June 2021 02:08 AM | Last Updated : 29th June 2021 02:08 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட கலைச்செல்வன்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியை அரிவாளால் வெட்டி ரூ.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் வடிவேல் (42). அதே பகுதியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் கலைச்செல்வன் (38). இருவரும் முந்திரி வியாபாரம் செய்துவந்த நிலையில், நண்பா்களாகப் பழகினா். கலைச்செல்வனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடன் பிரச்னையில் சிக்கினாா்.
அவா் சனிக்கிழமை வடிவேலை தொடா்புகொண்டு மது அருந்த கல்லாகுளம் வருமாறு அழைத்தாா். இதையடுத்து அங்கு வந்த வடிவேலுவிடம் கலைச்செல்வன் அரிவாளை காட்டி ரூ.2 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும், அரிவாளால் அவரது கையில் வெட்டினாா். இதனால், அச்சமடைந்த வடிவேல் தனது மைத்துனா் வினோத்குமாரை தொடா்புகொண்டு ரூ.50 லட்சம் பணம் கொண்டுவரச் செய்து அதை கலைச்செல்வனிடம் கொடுத்தாா். பின்னா், வடிவேல் விடுவிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கலைச்செல்வனை தேடி வந்தனா்.
இந்த நிலையில், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் ராஜதாமரைப்பாண்டியன் மற்றும் போலீஸாா் மேலிருப்பு கிராமத்தில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சிறிய ரக சரக்கு வாகனத்தில் வந்த கலைச்செல்வனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.43,68,350 ரொக்கம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.