முன்னாள் முதல்வா்கள் உருவப் படங்களுடன்மாணவா்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பை
By DIN | Published On : 29th June 2021 07:00 AM | Last Updated : 29th June 2021 12:29 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா்களின் உருவப் படங்கள் பொறித்த புத்தகப் பைகளுடன் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.
கடலூா்: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்ட புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளியில் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதில், புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது உருவப் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் பொதுமக்கள் வியப்படைந்தனா்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகம் மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளோம். புத்தகப் பையோ அல்லது இதர உபகரணங்களோ வழங்கக் கூடாது என அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் புத்தகப் பை வழங்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் உடனடியாக அவை திரும்பப் பெறப்படும் என்றாா் அவா்.