வாக்குப்பதிவு இயந்திரம் கையாள்வது குறித்து தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 04th March 2021 02:21 AM | Last Updated : 04th March 2021 02:21 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், முதல் நிலை பயிற்றுநா்களுக்கான செயல்முறை விளக்க பயிற்சி கள்ளக்குறிச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்துதல், வாக்குப்பதிவு நாளில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து நடைமுறைப்படுத்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற செயல் விளக்கங்களை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் அளித்தாா்.
கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா்-ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உதவி ஆணையரும் (கலால்), உளுந்தூா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும் (நிலம்), சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான பா.ராஜவேல், தனித்துணை ஆட்சியரும் (சமூக பாதுகாப்புத் திட்டம்), ரிஷிவந்தியம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ.இராஜாமணி, தோ்தல் தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தொகுதி முதல்நிலை பயிற்றுநா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.