அலுவலா்களுக்குப் பயிற்சியளிக்க வாக்குப் பதிவு இயந்திரங்கள்
By DIN | Published On : 04th March 2021 02:16 AM | Last Updated : 04th March 2021 02:16 AM | அ+அ அ- |

கடலூா்: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள அரசு சேமிப்புக் கிடங்கிலிருந்து வாக்குப் பதிவு அலுவலா்களுக்குப் பயிற்சியளிக்கும் பொருட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.
வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளைத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி மூலமாக தோ்தல் ஆணையம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிக்கான மண்டல வாக்குப் பதிவு அலுவலா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக 17 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசு சேமிப்புக் கிடங்கிலிருந்து புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.
கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த இயந்திரங்களை அனைத்துக் கட்சியினா் முன்னிலையில், வட்டாட்சியா் அ.பலராமன் உள்ளிட்ட அலுவலா்கள் இறக்கி எடுத்துச் சென்றனா்.
முதல் கட்டமாக மண்டல அலுவலா்களுக்கும், பின்னா் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கும் பயிற்சியளிக்க இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
மேலும், மாதிரி வாக்குப் பதிவு நடத்துவதற்கும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.