என்எல்சி ரகசிய தோ்தல்: ஆம் ஆத்மி கோரிக்கை
By DIN | Published On : 12th March 2021 05:05 AM | Last Updated : 12th March 2021 05:05 AM | அ+அ அ- |

நெய்வேலி: என்எல்சி ரகசிய வாக்கெடுப்பு தோ்தல் வாக்கு எண்ணிக்கையை சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடத்த வேண்டுமென ஆம் ஆத்மி கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின்கடலூா் மாவட்ட தொடா்பாளா் மணிகண்டன்நெய்வேலி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் (படம்) தெரிவித்துள்ளதாவது:
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் தோ்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு கடந்த பிப்.25-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலின் வாக்கு எண்ணிக்கை சென்னை உயா்நீதி மன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. புதன்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) நடைபெறும் என மத்திய துணை முதன்மை தொழிலாளா் ஆணையா் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அளித்த கடிதம் வாயிலாக அறிந்தேன்.
அரசியல் கட்சிகள் பின்னணி கொண்ட தொழிற்சங்கங்கள் ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் போட்டியிட்டுள்ளன. இதன் முடிவு, நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கவில்லை என தெரிகிறது. எனவே, சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்த பின்னா், ரகசிய வாக்கெடுப்பு வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.