திட்டக்குடி அருகே காவலாளி கொலை
By DIN | Published On : 12th March 2021 11:56 PM | Last Updated : 12th March 2021 11:56 PM | அ+அ அ- |

திட்டக்குடி அருகே காவலாளி கொல்லப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணையை தொடங்கினா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஆவட்டியில் கோயில் நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் ஆட்டுக்கிடை அமைத்திருந்தாா். இந்த இடத்தில் ஆடுகளை அடைத்து வைத்து, பெரம்பலூா் மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த தனது நண்பரான க.பிச்சைப்பிள்ளை (50) என்பவரை காவலுக்கு வைத்திருந்தாா்.
வியாழக்கிழமை இரவு இருவரும் காவலுக்கு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பிச்சைப்பிள்ளை தலையில் கத்திக் குத்து காயத்துடன் அந்தப் பகுதியில் சடலமாகக் கிடந்தாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த நாகராஜன், ராமநத்தம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.