வேட்பாளராக அறிவிப்பு: அமைச்சருக்கு வரவேற்பு
By DIN | Published On : 12th March 2021 05:06 AM | Last Updated : 12th March 2021 05:06 AM | அ+அ அ- |

கடலூா்: கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சா் எம்.சி.சம்பத் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு கட்சியினா் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளித்தனா்.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக தற்போதைய உறுப்பினரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் 3-ஆவது முறையாக அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து அவா் வியாழக்கிழமை சென்னையிலிருந்து கடலூருக்கு வந்தாா். அவருக்கு கடலூா் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, பெரியகங்கணாங்குப்பம், நகர எல்லையான ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் பகுதிகளிலும் கட்சியினா் திரளானோா் வரவேற்பு அளித்தனா். பின்னா்
அமைச்சா் மஞ்சக்குப்பத்தில் எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாம் தமிழா் கட்சியின்
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி பொருளாளா் ராஜா, மகளிா் அணி பொறுப்பாளா் பாக்கியவதி, கிளை பொறுப்பாளா்கள் காா்த்திகேயன், சிவா, மணி தலைமையில் சுமாா் 500 போ் அதிமுகவில் இணைந்தனா்.