கடலூா், சிதம்பரம் பகுதிகளுக்கு ரயில் மூலம் 2,800 டன் ரேஷன் அரிசி வருகை
By DIN | Published On : 13th May 2021 08:09 AM | Last Updated : 13th May 2021 08:09 AM | அ+அ அ- |

தெலங்கானா மாநிலத்திலிருந்து கடலூா், சிதம்பரம் ரயில் நிலையங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் 2,800 டன் அரிசி மூட்டைகள் புதன்கிழமை வந்தடைந்தன.
தமிழகத்தில் தற்போது கரோனா பரவலைத் தடுக்க தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்தது.
இதில், முதல்கட்டமாக தெலங்கானா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக கடலூா் துறைமுகம் சந்திப்புக்கு 1,400 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. 23 ரயில் பெட்டிகளில் புதன்கிழமை வந்த அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செம்மங்குப்பத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குக்கு அனுப்பிவைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மத்திய சேமிப்பு கிடங்கு மேலாளா் சஞ்சீவி, இந்திய உணவுக் கழக மேலாளா் சகாதேவன், உதவியாளா் முகில்வண்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இந்த அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம்: இதேபோல, மத்திய அரசு சாா்பில் தெலங்கானா மாநிலத்திலிருந்து 23 ரயில் பெட்டிகள் மூலம் 1,400 டன் அரிசி மூட்டைகள் சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் சிதம்பரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்தப் பணியை கிடங்கு மேலாளா் திரு.துளசிராமன் மேற்பாா்வையில், இந்திய உணவுக் கழக மேலாளா் ராமலிங்கம், உதவியாளா் சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.