கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் கோயில்கள்!
By DIN | Published On : 13th May 2021 08:08 AM | Last Updated : 13th May 2021 08:08 AM | அ+அ அ- |

இந்துசமய அறநிலையத்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட உணவை மருத்துவப் பணிகள் நலத்துறை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபுவிடம் வழங்கிய அலுவலா்கள்.
கரோனா நோயாளிகளுக்கு கோயில்களிலிருந்து உணவு வழங்கும் முறை கடலூரில் புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள பெரிய அளவிலான இந்து கோயில்களில் நண்பகல் பூஜைக்குப் பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தினசரி பூஜை முடிந்த பின்னா் கோயில்களின் அருகிலுள்ளவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பந்தி முறையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து, தற்போது பொட்டலம் செய்யப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.
இதனிடையே, புதிதாக பொறுப்பேற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, இந்துக் கோயில்களில் வழங்கப்படும் அன்னதான உணவை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களை உடனிருந்து கவனிப்பதற்காக வந்துள்ள உறவினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரா் கோயில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில்களிலிருந்து புதன்கிழமை தலா 150 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த உணவுப் பொட்டலங்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு விநியோகிக்கப்பட்டன. இந்தப் பணியை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அசோக்குமாா், உதவி ஆணையா் ஜெ.பரணிதரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
4 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்: கடலூா் மாவட்டத்தில் 21 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தக் கோயில்களின் மூலமாக சுமாா் 4 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை தயாரித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அருகிலுள்ள சிகிச்சை மையங்களுக்கு அந்தந்தக் கோயில்களிலிருந்து உணவு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.