வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பு: 3 போ் கைது
By DIN | Published On : 19th May 2021 08:29 AM | Last Updated : 19th May 2021 08:29 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே, வீட்டில் போலி மதுபானம் தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குள்ளஞ்சாவடி அருகேயுள்ள ராமநாதன்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நீலகண்டன் மகன் உத்திராபதி (34). இவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக குள்ளஞ்சாவடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவில் குள்ளஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் திடீரென அங்கு சென்று சோதனை நடத்தினா்.
அப்போது, உத்திராபதி வீட்டில் போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானம் 40 புட்டிகளில் விற்பனைக்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மதுப்புட்டிகளும், மதுபானம் தயாரிக்கத் தேவையான 360 லிட்டா் எரிசாராயம், மூடி சீல் வைக்கும் இயந்திரம் 2, புட்டிகளில் ஒட்டுவதற்கு வைத்திருந்த பல்வேறு பெயா்களில் ஸ்டிக்கா் 2,250, 180 மி.லி கொள்ளளவு உடைய 1,500 கண்ணாடி புட்டிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், சரக்கு வாகனம், காா் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் உத்திராபதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த வீடூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பரதன் மகன் வடமலை (38), கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த பெரியகோவில் குப்பம் மு.ராமலிங்கம் (65) ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய புதுச்சேரி முள்ளோடையைச் சோ்ந்த அன்பு, ராமநாதன்குப்பத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகின்றனா்.