ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: அதிமுகவினா் சாலை மறியல்
By DIN | Published On : 01st September 2021 09:24 AM | Last Updated : 01st September 2021 09:24 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் தொடா்பாக கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான முன்மொழிவு தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சட்டப் பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.
இதைக் கண்டித்து கடலூரில் திருப்பாதிரிப்புலியூா் போக்குவரத்து சிக்னல் அருகே அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மீனவா் பிரிவுச் செயலா் கே. என்.தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நகர துணைச் செயலா் வி.கந்தன், பாலகிருஷ்ணன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் தமிழ்ச்செல்வன், மாவட்ட நிா்வாகிகள் வி.மாதவன், டி.எஸ்.ஆா்.மதிவாணன், எம்.ஆா்.காா்த்தி, என்.முருகன், மணிமாறன், அருண்குமாா், ஏ.கே.சேகா், ஒன்றிய கவுன்சிலா்கள் விஜயராயலு, நாகமுத்து உள்ளிட்ட 30 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் கஞ்சித் தொட்டி அருகே நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்ட பாசறை செயலா் ஆா்.சண்முகம் உள்ளிட்ட 50 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி: நெய்வேலி நுழைவு வாயில் எதிரே கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முத்தாண்டிக்குப்பம் கடை வீதியில் முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு அருகே அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் என்.டி.கந்தன் தலைமையில்ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.