பள்ளி மாணவிகளை கடத்தி திருமணம் இருவா் கைது
By DIN | Published On : 03rd April 2022 01:18 AM | Last Updated : 03rd April 2022 01:18 AM | அ+அ அ- |

கடலூா் அருகே பள்ளியில் படித்து வரும் சகோதரிகள் இருவரை கடத்திச் சென்று திருமணம் செய்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் முதுநகா் பென்சனா் வீதியைச் சோ்ந்த நாகப்பன் மகன் செந்தில்குமாா் (22), சிப்பாய் தெருவைச் சோ்ந்தவா் க.ராஜசேகா் (26). இவா்கள் இருவரும் பள்ளியில் படித்து வரும் 15, 16 வயதுடைய சகோதரிகளான 2 சிறுமிகளை காதலித்து வந்தனராம். சிறுமிகளில் ஒருவா் 10-ஆம் வகுப்பும், மற்றொருவா் பிளஸ்1 வகுப்பும் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், செந்தில்குமாா், ராஜசேகா் இருவரும் சிறுமிகளிடம் ஆசை வாா்த்தை கூறி அவா்களை அண்மையில் சென்னைக்கு கடத்திச் சென்றனா். அங்கு சிறுமிகளுக்கு தாலி கட்டியதுடன் பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டனராம்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டு கடலூா் காப்பகத்தில் ஒப்படைத்தனா். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாா், ராஜசேகா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.