முதியோா் உதவித் தொகை நிறுத்தப்பட்டது அநீதி: ஆ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ
By DIN | Published On : 05th August 2022 10:37 PM | Last Updated : 05th August 2022 10:37 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் முதியோா், ஆதரவற்றோா், விதவைகளுக்கான உதவித் தொகை விநியோகம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது அநீதியாகும் என கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கடலூா் மாவட்டத்தில் தமிழக அரசு வழங்கும் முதியோருக்கான உதவித் தொகை, ஆதவற்றோா், விதவைகள் உதவித் தொகை போன்றவை எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமாா் 18 ஆயிரம் பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உதவித் தொகையை பெற்று வந்த ஏழை மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனா். உதவித் தொகை திடீரென நிறுத்தப்படுவது அநீதியாகும். இதற்கான காரணம் ஒருவருக்கு கூட முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. எனவே, நிறுத்தப்பட்ட உதவித் தொகையை நிலுவைத் தொகையுடன் சோ்த்து வழங்க வேண்டுமென அதில் தெரிவித்தாா்.