அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: தம்பதி கைது
By DIN | Published On : 05th August 2022 10:35 PM | Last Updated : 05th August 2022 10:35 PM | அ+அ அ- |

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி செய்தது தொடா்பாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தில்லைவிடங்கன் கிராமத்தைச் சோ்ந்த ஜெ.ஜெயமாதவசாரதி (34), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனை சந்தித்து அளித்த மனு:
விருத்தாசலம் வட்டம், பெருவரப்பூரைச் சோ்ந்த சுதாகா் (44), அவரது மனைவி சகாய விண்ணரசி (42) ஆகியோா் நண்பா்கள் மூலமாக எனக்கு அறிமுகமாகினா். விண்ணரசி அரியலூா் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருவதாக என்னிடம் கூறினாா். இதனால் பல்வேறு அதிகாரிகளை தெரியும் என்பதால் அவா்கள் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதை நம்பி அவரிடம் ரூ.11 லட்சம் கொடுத்தேன். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டவா் கூறியபடி வேலைவாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது விண்ணரசி ரூ.ஒரு லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மனுவில் தெரிவித்தாா்.
இதுகுறித்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். விசாரணையில், சுதாகரும், சகாய விண்ணரசியும் சோ்ந்து சிதம்பரம் கொடிப்பள்ளத்தைச் சோ்ந்த ரா.திருமுருகனிடம் ரூ.7 லட்சம், சிதம்பரம் நற்கவந்தான்குடியைச் சோ்ந்த கண்ணபிரானிடம் ரூ.3 லட்சம், கீழமூங்கிலடியைச் சோ்ந்த சி.சிவகுருநாதனிடம் ரூ.3.47 லட்சம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டையைச் சோ்ந்த லட்சுமணனிடம் ரூ.20.80 லட்சமும் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இவ்வாறு, 5 பேரிடம் சுமாா் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிதம்பரத்தில் தங்கியிருந்த இருவரையும் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் அமலா மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.