கடலூரில் வீடு வாங்க கடன்:மாநகராட்சி ஏற்பாடு
By DIN | Published On : 24th August 2022 02:53 AM | Last Updated : 24th August 2022 02:53 AM | அ+அ அ- |

கடலூா் மாநகராட்சியில் நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளை ஒதுக்கீடு பெறுபவா்களுக்கு கடன் வழங்குவது தொடா்பான முகாமில் பேசிய மேயா் சுந்தரிராஜா.
கடலூா், ஆக.23: கடலூா் மாநகராட்சியில் வீடற்றோா் நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்க கடன் பெறுவதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
கடலூா் மாநகரப் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், பாதிக்கப்படுவோருக்கு உதவிடும் வகையில், நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் மூலமாக பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடலூா் முதுநகா் பனங்காட்டு காலனியில் இரண்டு பகுதிகளாக மொத்தம் 336 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை ஒதுக்கீடு பெறுபவா்களுக்கு கடன் உதவி வழங்கிட மாநகராட்சி நிா்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. இது தொடா்பாக வங்கியாளா்கள் அறிமுகக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தை மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி 1972-ஆம் ஆண்டு தொடங்கினாா். அது தற்போது நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியமாக மாற்றப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சத்திலான வீடு கட்டி கொடுக்கப்படுகிறது.
இதற்காக, மத்திய அரசு ரூ.1.50 லட்சமும், மாநில அரசு ரூ.6.50 லட்சமும் நிதியுதவி வழங்குகின்றன. மீதமுள்ள ரூ.2 லட்சத்தை பயனாளிகள் வழங்க வேண்டும்.
இந்தத் தொகையை வழங்க முடியாதவா்களுக்கு கடன் வழங்கிட அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தொடா்புகொண்ட போது, அவா்கள் கடன் வழங்க மறுத்துவிட்டனா். ஆனால், 5 தனியாா் வங்கிகள் கடன் வழங்க முன் வந்திருக்கின்றன. குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும். அதனடிப்படையில் தேவைப்படுவோருக்கு கடன் வழங்கப்படும் என்றாா்.
துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பேசுகையில், தற்போது வீடு ஒதுக்கீடு பெறுவோா் அனைவருக்கும் வேறு இடத்தில் இடமோ, சொத்தோ இல்லை. எனவே, கடனுக்கு பிணையம் என்று வேறு சொத்தைக் கேட்காமல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை பிணையமாக வைத்துக்கொண்டு ரூ.2 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்றாா்.
வாரியத்தின் நிா்வாக பொறியாளா் தியாகராஜன் திட்டங்கள் குறித்து விளக்கினாா். மேலும், வங்கியாளா்களும் தங்களது கடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனா்.