சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ. ஒரு லட்சம் திருட்டு
By DIN | Published On : 25th August 2022 01:52 AM | Last Updated : 25th August 2022 01:52 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி அவரது இரு சக்கர வாகனப் பெட்டியில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்தை நூதன முறையில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் பொன்னம்பல நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி கலாராணி (51). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை வடக்கு வீதியில் உள்ள அரசுடைமை வங்கியில் நகைகளை அடகு வைத்து, ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மேல வீதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றனா்.
அங்கு, நகைகளை அடகு வைத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை செலவுக்கு எடுக்கொண்டு மளிகைக் கடையில் பொருள்கள் வாங்க சண்முகம் சென்றாா். மீதமுள்ள ரூ.ஒரு லட்சத்தை பையுடன் இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் கலாராணி வைத்தபோது, இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் இருவா், சில ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு அவரது கவனத்தை திசை திருப்பினா். பின்னா், கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. ஒரு லட்சத்துடன் கூடிய பணப் பையை திருடிக்கொண்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கலாராணி அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.