‘பண்ருட்டி நகராட்சியில் ரூ.13 கோடி வரி பாக்கி’
By DIN | Published On : 31st August 2022 04:03 AM | Last Updated : 31st August 2022 04:03 AM | அ+அ அ- |

பண்ருட்டி நகராட்சியில் ரூ.13 கோடி வரை வரி பாக்கி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக நகா்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பண்ருட்டி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் மகேஸ்வரி, துணைத் தலைவா் அ.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கதிா்காமன், ராமதாஸ், சோழன், சிவா, ராமலிங்கம், சண்முகவல்லி, மோகன் ஆகியோா் பேசியதாவது:
பணிக்கு வராத நகராட்சி ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு ஒழிப்புப் பணியை
விரைவுப்படுத்த வேண்டும். தொழில் வரி ரூ.50 லட்சத்தை தள்ளுபடி செய்யாமல் அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். நகராட்சி வளாகத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து தலைவா் பேசியதாவது: உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பண்ருட்டி நகராட்சியில் ரூ.13 கோடி வரை வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க நகா்மன்ற உறுப்பினா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.