பொதுநல அமைப்பினா் ஆலோசனை
By DIN | Published On : 09th December 2022 01:21 AM | Last Updated : 09th December 2022 01:21 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன்.
கடலூரில் அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் சங்கத்தினா், பொதுநல அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் கூட்டத்தை ஒருங்கிணைத்தாா். காங்கிரஸ் மாவட்ட தலைவா் திலகா், கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் குளோப், தவாக மாமன்ற உறுப்பினா் அருள்பாபு, கடலூா் அனைத்துக் குடியிருப்போா் சங்க பொதுச் செயலா் மருதவாணன், கடலூா் பொதுநல கூட்டமைப்புச் செயலா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் நின்று சென்ற மன்னாா்குடி, காரைக்கால் ரயில்கள்
கரோனா பொது முடக்க காலத்துக்குப் பிறகு இங்கு நின்று செல்வதில்லை. எனவே, இந்த ரயில்கள் மீண்டும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம், உழவன், திருப்பதி ரயில்கள் கடலூா் துறைமுகம் சந்திப்பில் நின்று செல்லவும், கன்னியாகுமரி - புதுச்சேரி, மஹால் விரைவு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் - விருத்தாசலம், மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி, மயிலாடுதுறை-மைசூா் ஆகிய விரைவு ரயில்கள், விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் ஆகியவற்றை துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும், கடலூா் - புதுச்சேரி - சென்னை இடையே இருப்புப் பாதை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானித்தனா்.