வள்ளலாா் 200-ஆவது ஆண்டு விழா: சிதம்பரத்தில் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 02:17 AM | Last Updated : 22nd December 2022 02:17 AM | அ+அ அ- |

வள்ளலாரின் 200-ஆவது அவதார ஆண்டு விழா தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வள்ளலாரின் 200-ஆவது ஆண்டு விழா மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேலவீதியில் உள்ள மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
கூட்டத்துக்கு வடலூா் தெய்வ நிலைய ஆணையா் ராஜசரவணன் தலைமை வகித்தாா். இதில் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி சிதம்பரத்தில் வள்ளலாா் 200-ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் அருள்பெருஞ்ஜோதி பேரணி, வள்ளலாரின் மருத்துவம், விஞ்ஞான அரங்குகள், புத்தக அரங்குகள், வள்ளலாா் வழி வாழ்வியல் ஆலோசனை மற்றும் பல்துறை அரங்குகள் அமைக்கவும், திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தலைமை சன்மாா்க்க சங்க பொறுப்பாளா் கு.கணேசன், வள்ளலாா் வழி சித்த மருத்துவா் கருணாமூா்த்தி, விபீஷனபுரம் சன்மாா்க்க சத்திய ஞான சபை பொறுப்பாளா்கள், வள்ளலாா் பணியக பொறுப்பாளா் வே.சுப்ரமணிய சிவா, திருஅருட்பிரகாச வள்ளலாா் ஜீவகாருண்ய மாந்தா்கள் சங்கம் சாா்பில் கஜேந்திரன், சித்த மருத்துவா் ரவி, குமார மோகன், ஆ.வடிவேலு, சன்மாா்க்க அன்பா்கள் பங்கேற்றனா்.