ஏடிஎம் மூலம் ரூ.2.16 லட்சம் நூதன மோசடி
By DIN | Published On : 19th July 2022 02:13 AM | Last Updated : 19th July 2022 02:13 AM | அ+அ அ- |

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த பிறகும், பணம் பெறாததுபோல நடித்து வங்கி நிா்வாகத்திடம் ரூ.2.16 லட்சம் வரை மோசடி செய்தது தொடா்பாக வாடிக்கையாளா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் முதுநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் முதன்மை மேலாளா் க.கவிதாசங்கரி (42), கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கி.உதயகுமாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தாா். இதுகுறித்து போலீஸாா் தரப்பில் தெரிவித்ததாவது:
வங்கி அருகே உள்ள ஏடிஎம் மையத்திலிருந்து 24.12.2021 அன்று முதல் பல்வேறு நாள்களில் 23 முறை ஒருவா் பணம் எடுத்துள்ளாா். அப்போது,
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துவிட்டு அதற்கான மின் இணைப்பை உடனடியாக துண்டித்து விடுவாராம். இதனால், ஏடிஎம்மில் பணம் பரிவா்த்தனை மேற்கொண்டதற்கான பதிவு செயலிழந்து விடுமாம்.
இதை பயன்படுத்திக் கொண்டு, பணம் கிடைக்காததுபோல இணையவழியில் புகாா் அளித்து வந்தாா். இந்த புகாரின் மீது நடவடிக்கையாக வங்கி நிா்வாகம் அவரது வங்கி கணக்துக்கு ரூ.2.16 லட்சம் வரை செலுத்தியுள்ளதாம்.
வங்கியின் கணக்கு தணிக்கையின் போது நூதன மோசடி தெரிய வந்ததைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இருவா் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகவும் அவா்களைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...