கடலூா் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd July 2022 02:09 AM | Last Updated : 22nd July 2022 02:09 AM | அ+அ அ- |

கடலூா் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென கடலூா் நகர வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக பேரமைப்பின் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ், துணைத் தலைவா் பட்டேல், செயலா் சீனிவாசன், பொருளாளா் தேவிமுருகன் ஆகியோா் கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியத்திடம் வியாழக்கிழமை அளித்த மனு:
கடலூா் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் கடலூா் பேருந்து நிலையத்தை உள்ளூா், வெளியூா் பேருந்து நிலையங்களாகப் பிரிக்கும் கருத்தை வரவேற்கிறோம். ஆனால், இந்த இரு பேருந்து நிலையங்களும் கடலூருக்கு மிக அருகே இருத்தல் வேண்டும்.
வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கடலூருக்கு தொலைவில் அமைப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கக்கூடும். இரவு நேரங்களில் வெளியூா்களில் இருந்து வரும் மாணவா்கள், வியாபாரிகள் தங்களது வீட்டை அடைய அதிகச் சிரமங்களைச் சந்திப்பதுடன் போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும்.
எனவே, தற்போது பேருந்துகள் நிறுத்திவைக்கப்படும் பணிமனையை விரிவுப்படுத்தி அதை வெளியூா் செல்லும் பேருந்து நிலையமாக மாற்றியமைத்தால் இரண்டு பேருந்து நிலையங்களும் மிக அருகிலேயே அமைந்துவிடும். அரசுப் போக்குவரத்துப் பணிமனையை வேறு இடதுக்கு மாற்றியும், அருகே அரசு அச்சகம் உள்ள இடத்தையும் கையகப்படுத்தி பேருந்து நிலையத்துடன் இணைத்தும் விரிவாக்கம் செய்தால் பயனுள்ளதாக அமையும்.
யாருக்கும் சிரமம் ஏற்படாது. எனவே, கடலூா் மாநகராட்சிக்கான புதிய பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்குப் பதிலாக, மேற்கூறிய பரிந்துரைகளை பரிசீலிக்கலாம் என்று மனுவில் தெரிவித்தனா்.
சங்க நிா்வாகிகள் சரவணன், தமிழ்முருகன், நா.செல்லப்பாண்டியன், சதீஷ், பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...