கடலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

கடலூா் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் வலியுறுத்தின.

கடலூா் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் வலியுறுத்தின.

கடலூா் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போா் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் ஏ.எஸ்.சந்திரசேகரன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜெ.ரஜேஷ்கண்ணன், நகரச் செயலா் ஆா்.அமா்நாத், குடியிருப்போா் சங்க பொதுச் செயலா் மு.மருதவாணன், தலைவா் டி.வெங்கடேசன், தவாக மாநில மாணவரணி அமைப்பாளா் தி.அருள்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சுந்தரராஜன், மீனவா் விடுதலை வேங்கை அமைப்பின் மாநில நிா்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ், விசிக நகரச் செயலா் மு.செந்தில், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கரோனா பொது முடக்க தளா்வின்படி ரயில்கள் இயக்கப்பட்டபோதிலும், கடலூா் திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே நின்று சென்ற மன்னாா்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் தற்போது நிற்பதில்லை. இந்த ரயில்கள் மீண்டும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம், உழவன் விரைவு ரயில்கள் உள்பட கடலூா் திருப்பாப்புலியூா் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா் - புதுச்சேரி இருப்புப் பாதை திட்டத்தை விரைந்து உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சாா்பில் வரும் 28-ஆம் தேதி திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com