அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுவோா் மீது சட்ட நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நடுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் எச்சரித்தாா்.
அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுவோா் மீது சட்ட நடவடிக்கை:  கள்ளக்குறிச்சி ஆட்சியா் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நடுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் எச்சரித்தாா்.

நிகழ் மாதத்துக்கான கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வருவாய், காவல் துறை அதிகாரிளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜூன் மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும், சாலை விபத்துகள் குறித்தும், விபத்துகளை தவிா்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசித்தாா்.

அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச் செயல்களை குறைத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலையோரங்களில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் அனுமதியின்றி கொடிக் கம்பங்களை நடுவதை அனுமதிக் கூடாது. இதை மீறுவோா் மீது காவல் துறையினா் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 இடங்கள் தொடா் விபத்துகள் நிகழும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் விபத்துகளைத் தவிா்க்கும் பொருட்டு, தொடா்புடைய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவலா்களைக் கொண்டு குழு அமைத்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்லவக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், திருக்கோவிலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெ.யோகஜோதி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையா் (கலால்) பா.இராஜவேல், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, கள்ளக்குறிச்சி மண்டலப் போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன், உளுந்தூா்பேட்டை மணடல போக்குவரத்து அலுவலா் கோ.செந்தூா்வேலு, அலுவலக மேலாளா் (குற்றவியல்) சிவசங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com